லண்டன், மே-12 – சூரியப் புயலின் வர்ண ஜாலங்களை வானில் கண்டு களிக்கும் மகத்தானதொரு வாய்ப்பினை இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் மக்கள் பெற்று இன்புற்றிருக்கின்றனர்.
சூரியனின் மேல் பகுதியில் நிகழும் மின்காந்த வெடிப்புகள் அங்கிருந்து பூமியை கடந்து செல்லும்போது, அதன் விளைவுகளை பூமி உணர்வதையே நாம் சூரியப் புயல் என்கிறோம்.
இந்த காந்தப் புயல் காரணமாக வடக்கு அல்லது தெற்கு திசைகளில் வண்ணக்கலவையாக வெளிப்படும் வான்வெளி வெளிச்சங்களின் தோரணங்கள், கண்களுக்கு விருந்தாக அமையும் என்றால் மிகையில்லை.
அப்படியோர் அனுபவத்தை தான் மேற்கண்ட நாட்டு மக்கள் கடந்த சில தினங்களாகப் பெற்று வந்துள்னர்.
குறிப்பாக இங்கிலாந்து மக்கள் அந்த வான் வெளி வண்ணக் காட்சிகளைக் கண்டு அதிசயித்து, அவற்றின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இளஞ்சிவப்பு, பச்சை, ஊதா, மஞ்சள் என வானில் ஒளிக்காட்சிகள் தோன்றி பிரமிக்க வைப்பதை அப்படங்களில் காண முடிகிறது.
பொதுவாக சக்தி வாய்ந்த இந்த சூரிய காந்தப் புயல் காரணமாக விமானங்கள், கப்பல் போக்குவரத்து, செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு, மின் விநியோகம் உள்ளிட்டவை பாதிக்கப்படும்.
என்றாலும், முன்கூட்டியே அது குறித்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு விடும் என்பதால் கவலைக் கொள்ளத் தேவையில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதற்கு முன் 2003-ஆம் ஆண்டு சுவீடனில் சக்தி வாய்ந்த சூரியப் புயல் ஏற்பட்டது.
இப்போது 20 ஆண்டுகள் கழித்து பூமியை மீண்டும் சூரியப் புயல் தாக்கியுள்ளது.