
கோத்தா பாரு, செப்டம்பர் 7 – அதிகாரிகளிடமிருந்து தப்பியோட முயன்ற ஆடவன் ஒருவனின் கார், கோத்தா பாரு மருத்துவமனைக்கு அருகில், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, அவன் கைதுச் செய்யப்பட்டான்.
நேற்று நண்பகல் மணி 12 வாக்கில், டீசலை கடத்தி சென்ற போது, போலீஸ் பின் தொடர்வதை உணர்ந்த அவ்வாடவன், பாச்சோக்கிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரையில் தனது புரோட்டோன் ஜென் 2 (Gen 2) ரக காரை அதிவேகமாக செலுத்தியதாக கூறப்படுகிறது.
பாச்சோக்கிலிருந்து கோத்தா பாரு செல்லும் சாலையில், சந்தேகிக்கும் வகையில் பயணித்த, உள்நாட்டு வாகன பதிவு எண் பொருத்தப்பட்ட அந்த காரை, தமது அதிகாரிகள் பின் தொடர்ந்து துரத்திச் சென்ற போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக, கிளந்தான் உள்நாட்டு வாணிப, வாழ்க்கை செலவின அமைச்சின் இயக்குனர் அஸ்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.
முன்னதாக, அவ்வழி நெடுகிலுள்ள, சில எண்ணெய் நிலையங்களில் அவன் டீசலை வாங்கியதை தொடர்ந்து சந்தேகம் எழுந்ததாகவும் அவர் சொன்னார்.
எனினும், அதிகாரிகளின் வருகையை உணர்ந்து கொண்ட அவன், காரை வேகமாக செலுத்தி தப்பி ஓட முற்பட்ட போது, அவனை துரத்திச் செல்லும் நிலை ஏற்பட்டது.
அவனது காரை சோதனையிட்டதில், 32 கொள்கலன்களில் நிரப்பப்பட்டிருந்த, ஆயிரத்து 720 ரிங்கிட் பெருமானமுள்ள, 800 லிட்டர் டீசலும் பறிமுதல் செய்யப்பட்டது.
29 வயதான அவ்வாடவன் விசாரணைக்காக மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.