
கோலாலம்பூர், மார்ச் 22 – இணைய மோசடி சம்பவங்கள் உட்பட கடந்த ஆண்டு 20,041 பேர் வங்கிகளில் தங்களது பணத்தை இழந்தனர் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இணைய ரீதியிலான மோசடியினால் 9,258 பேர் வங்கியிலுள்ள பணத்தை இழந்திருப்பதாக நிதியமைச்சருமான அன்வார் சுட்டிக்காட்டினார்.
இதுதவிர மக்காவ் மோசடித் திட்டத்தில் 3,370 பேரும் , பொய்யான முதலீட்டு திட்டங்களால் 3,266 பேரும், ஆப்பிரிக்க மோசடி மற்றும் காதல் மோசடி திட்டத்தில் 792 பேரும் பணத்தை இழந்தனர். மேலும் SMS குறுந்தகவல் மூலம் 139 பேரும் மோசடிக்கு உள்ளானதாக அன்வார் தெரிவித்தார். வங்கியிலுள்ள பாதுகாப்பு பலவீனங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு இதனை அரசாங்கம் கடுமையாக கருதுவதால் இந்த விவகாரத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.