
2021-ஆம் ஆண்டு, தலைநகர், பங்சாரில் நிகழ்ந்த கைகலப்பில், ஆடவர் ஒருவரை அடித்துக் கொன்றதாக நம்பப்படும் மூவருக்கு எதிராக இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எனினும், கொலை குற்றச்சாட்டுகள் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்பதால், 27 வயது ஜி.நரேஸ், 28 வயது வி.பிரவின், 30 வயது எஸ்.லெட்சுமணன் ஆகிய மூவரிடமிருந்தும் இன்று வாக்குமூலம் எதுவும் பெறபடவில்லை.
அம்மூவருடன், இந்த கொலை தொடர்பில் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கும் சைட் கமால் சைட் முஹமட், எஸ்.சி. மகேசனுக்கு எதிராகவும் இன்று கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை ஜூன் 14 தேதி செவிமடுக்கப்படுமென நீதிமன்றம் தெரிவித்தது.
2021-ஆம் ஆண்டு, மார்ச் 31-ஆம் தேதி,பின்னிரவு மணி ஒன்று வாக்கில், பங்சார், Affin வங்கிக்கு பின்புறம் உள்ள கார் நிறுத்துமிடத்திற்கு நடந்து கொண்டிருந்த 28 வயது எம். சன்ஜித் குமாரும், அவரது நண்பரும் ஆயுதம் ஏந்திய கும்பலால் தாக்கப்பட்டனர்.
அதனால் பலத்த காயங்களுக்கு இலக்கான சன்ஜித் குமார் மருத்துவமனையில் உயிரிழந்த வேளை ; அவரது நண்பர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.