
ஷா ஆலாம், ஆகஸ்ட்டு 22 – 2023 SPM தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுவது தொடர்பில், கல்வி அமைச்சு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.
இவ்வாண்டுக்கான SPM தேர்வு, இதற்கு முன் நிர்ணயிக்கப்பட்டதற்கு மாறாக, டிசம்பர் ஐந்தாம் தேதி தொடங்குமென கூறப்படுகிறது.
எனினும், அவ்விவகாரம் குறித்து, கல்வி அமைச்சு இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என, கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் தெரிவித்தார்.
முன்னதாக, பள்ளி தவணையின் தொடக்கத்தை, படிப்படியாக ஜனவரிக்கு கொண்டு வரும் முயற்சிக்கு ஏற்ப, இவ்வாண்டுக்கான SPM தேர்வு, டிசம்பர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெறுமென ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
டிசம்பர் ஐந்தாம் தேதி அறிவியல் நடைமுறைத் தேர்வு தொடங்கும் வேளை ; அடுத்தாண்டு ஜனவரி எட்டாம் தேதி பேச்சுத் திறன் தேர்வு நடைபெறும்.
எழுத்து தேர்வுகள், ஜனவரி 30-ஆம் தேதியிலிருந்து மார்ச் ஏழாம் தேதி வரை நடத்தப்படும்.
2022-ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு, ஜனவரி 30-ஆம் தேதியிலிருந்து மார்ச் 15-ஆம் தேதி வரையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.