![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/WhatsApp-Image-2024-09-17-at-1.12.35-PM.jpeg)
கோலாலம்பூர், செப்டம்பர் 17 – 2024ஆம் ஆண்டுக்கான மித்ராவின் நிதியில் 95.4 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா தலைவருமான பி.பிரபாகரன் இன்று தெரிவித்தார்.
இந்தியச் சமுதாயத்தின் உருமாற்றத்திற்காக அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மித்ராவின் வாயிலாக 100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி வருகிறது.
அவ்வகையில் இவ்வாண்டுக்கான நிதி, எவ்வாறு இந்திய மக்களுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டத்தை, செனட்டர் உட்பட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விவரித்ததாக அவர் கூறினார்.
மித்ராவின் வாயிலாக மேற்கொள்ளும் முன்னெடுப்புகளை விரைவாக மக்களிடம் சேர்ப்பதற்கு மக்களின் பிரதிநிதிகளே முக்கியம்.
ஆகவே மித்ராவின் நடப்புத் திட்டங்களும் எதிர்கால வியூகங்களும் இன்று இந்தியப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப் பட்டத்தையும் அவர் கூறினார்.
இதனிடையே, எதிர்வரும் 15 அக்டோபர் முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை 2025ஆம் ஆண்டிற்கான மித்ராவின் மானியத்திற்கான விண்ணப்பமும் திறக்கப்படவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
அதேவேளையில் நாளை தொடங்கி அக்டோபர் 17ஆம் திகதி வரை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயிலும், முதல் மற்றும் இரண்டாம் தவணை பி40 பிரிவு மாணவர்களுக்கான 2,000 ரிங்கிட் வழங்கும் திட்டமும் திறக்கப்படவுள்ளது.
பல்கலைக்கழகங்களில் பயிலும் உடல் ஊனமுற்ற மாணவர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும் என்றார், அவர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்த உதவித்தொகை உட்பட மானிய விண்ணப்பத்திற்கான விதிமுறைகளையும் மித்ராவின் வலைப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளாலாம், என்றார்.