2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துணைப் பிரதமர் வோங்கிடம் தலைமைத்துவத்தை ஒப்படைப்பேன் சிங்கப்பூர் பிரதமர் – லீ சியின் லோங் தகவல்

சிங்கப்பூர், நவ 5 – அனைத்தும் சரியாக நடந்தால் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துணைப்பிரதமர் வோங்கிடம் தலைமைதுவத்தை ஒப்படைக்கபோவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியின் லோங் தெரிவித்திருக்கிறார்.
எந்தவொரு நாட்டிற்கும் தலைமைத்துவ மாற்றம் எப்போதும் சிக்கலானது. பல விஷயங்கள் தவறாக போகலாம். சிங்கப்பூர் மக்கள் மட்டுமின்றி சிங்கப்பூருக்கு வெளியே உள்ளவர்கள், சிங்கப்பூருக்கு அருகில் மற்றும் தொலைவில் உள்ளவர்கள் கூட தலைமைத்துவ மாற்றத்தை மிகவும் அணுக்கமாக கவனிக்கக்கூடும். நமது வரலாற்றில் மூன்றாவது தலைமைத்துவ மாற்றத்தின் வெற்றியைப் பொறுத்தே அனைத்தும் இருப்பதாக அவர் கூறினார்.
இந்த முடிவை தாம் கவனமாக சிந்தித்ததாகவும், 3ஆவது மற்றும் 4ஆவது தலைமுறை அமைச்சர்களுடன் முழுமையாக விவாதித்ததாகவும் லீ சியின் லோங் தெரிவித்தார். துணைப்பிரதமர் வோங் மற்றும் 4-ஆவது தலைமுறை குழுவினர் பல ஆண்டுகளாக சேவை செய்துள்ளதோடு பெரிய பொறுப்புகளை ஏற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தமது தலைமைத்துவத்தை துணைப்பிரதமர் வோங்கிடம் ஒப்படைக்கவிருப்பதாகவும் அதன் பிறகு புதிய பிரதமர் தம்மை பயன்படுத்திக் கொள்ளும் இடத்தில் தாம் பணியாற்றுவேன் என லீ சியின் லோங் கூறினார்.