கோலாலம்பூர், ஆக்ஸ்ட்-16, மலேசியப் பொருளாதாரம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்ப்புகளை மீறி 5.9 விழுக்காடாக வலுவாகப் பதிவாகியுள்ளது.
இதே ஓராண்டுக்கு முன் 4.2 விழுக்காடாக அது பதிவாகியிருந்தது.
காலாண்டின் பொருளாதார உயர்வுக்கு, பணப்புழக்கமும் அதனால் அதிகரித்த வீட்டுச் செலவுகளும், வலுவான ஆள்பலச் சந்தையும் முக்கியக் காரணமென தேசியப் புள்ளிவிவரதத் துறைத் தலைவர் டத்தோ ஸ்ரீ மொஹமட் உசிர் மாஹிடின் (Datuk Seri Mohd Uzir Mahidin) தெரிவித்தார்.
வீட்டுச் செலவு அதிகரிப்புக்கு, விழாக்காலங்கள், புதியப் பள்ளி தவணை திறப்பு, ரஹ்மா ரொக்க உதவியின் மூன்றாம் கட்ட விநியோகம், EPF-பின் மூன்றாவது கணக்கில் இருந்து பணத்தை மீட்டது போன்ற அம்சங்கள் வழிவகுத்தன.
அதோடு, சேவை மற்றும் தயாரிப்புத் துறைகளின் ஊக்கமளிக்கும் வளர்ச்சியும் பொருளாதாரத்தை உந்தச் செய்துள்ளன என்றார் அவர்.
வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் வருகை, நிரந்தர முதலீட்டு அதிகரிப்பு, பெருந்திட்டங்களின் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களும் மலேசியப் பொருளாதாரத்திற்கு நேர்மறையான தாக்கத்தைக் கொடுத்திருப்பதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், இந்த 2024-ன் முதல் அரையாண்டில் நாடு 5.1 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைப் பதிவுச் செய்துள்ளது.
இவ்வாண்டு முழுமைக்கும் 4 முதல் 5 விழுக்காட்டுக்கும் இடையில் பொருளாதாரம் வளர்ச்சிப் பெறுமென்ற அரசாங்கத்தின் இலக்கை அது தாண்டியிருப்பதாக டத்தோ ஸ்ரீ உசிர் கூறினார்.