கோலாலம்பூர், நவம்பர்-12 – 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட எந்த சமூகத்தையும் பிரதமர் ஒதுக்கவில்லை.
அப்படியோர் உண்மைக்குப் புறம்பான தகவலைப் பரப்பி எந்தவொரு தரப்பும் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என பேராக் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் கேட்டுக் கொண்டார்.
இந்தியச் சமூகத்தை பகடையாக வைத்து பட்ஜெட் குறித்த உண்மைகளை சிலர் திசை திருப்ப முயற்சிப்பதாக அந்த PKR MP குற்றம் சாட்டினார்.
வரவு செலவுத் திட்டத்தில் இந்தியச் சமூகம் பயன்பெற்றிருப்பதாக பட்ஜெட் விவாதத்தின் போது தான் பேசியதை, ஏதோ அரசாங்கத்துக்கு கூஜா தூக்குவது போல் சிலர் விமர்சனம் செய்கின்றனர்.
இந்தியர்களுக்கு வெறும் 130 மில்லியன் ரிங்கிட் தானா என கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால், தனித்தனியாக அறிவிக்கவில்லையென்றாலும் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக மற்ற மலேசியர்களைப் போலவே இந்தியச் சமூகமும் பயன்பெறுகிறது என்ற கருத்தில் நான் உறுதியாக உள்ளேன் என்றார் அவர்.
இந்தியச் சமூக மேம்பாட்டுக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து பதிலளிக்கும் பொறுப்பிலுள்ள தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனே அனைத்தையும் தெளிவாக விளக்கியுள்ளார்.
இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு நிதி அதிகரிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையை மேலிடத்துக்குக் கொண்டுச் செல்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
எனவே, உண்மைகளை திசைத் திருப்பி சமுதாயத்தைத் தவறாக வழி நடத்த வேண்டாமென சம்பந்தப்பட்ட தரப்புகளை கேட்டுக் கொள்வதாக, மக்களவையில் செய்தியாளர் சந்திப்பின் போது கேசவன் கூறினார்.