வாஷிங்டன், ஆகஸ்ட்-9, 63 நாட்களாக அனைத்துலக விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்டுள்ள நாசா விஞ்சானிகள் இருவரும், அடுத்தாண்டு பிப்ரவரி வரை பூமி திரும்ப மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் (Butch Wilmore) இருவரும் பயணம் செய்த போயிங் நிறுவனத்தின் Starliner விண்கலம் இரு மாதங்களாக பழுதாகியுள்ளதே அதற்குக் காரணம்.
அப்பழுதைச் சரி செய்து எப்படியாவது இருவரையும் பூமிக்குக் கொண்டு வர இங்குள்ள ஏவுதள பணியாளர்கள் அரும்பாடுபட்டு வருகின்றனர்.
என்றாலும், ஆகக் கடைசி தகவலின் படி, குறைந்தது 2025 பிப்ரவரி வரை அவர்களால் பூமி திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அவசர ஏற்பாடாக, இரு விண்வெளி வீரர்களை, அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
ஆனால், சுனிதாவையும் பட்சரையும் அவர்கள் அடுத்த சில மாதங்கள் வரை திரும்ப பூமி அழைத்து வர முடியாது என்பதே நிதர்சன உண்மையெனக் கூறப்படுகிறது.
வெறும் ஒரு வார கால பயணமாக விண்வெளி சென்ற அவ்விருவரும், கடந்த ஜூன் 13-ஆம் தேதியே பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும்.
ஹீலியம் வாயுக் கசிவால் கோளாறடைந்துள்ள Starliner விண்கலத்தின் பழுது சரி செய்யப்படுவதற்கு முன்பே அது பூமி திரும்பினால், வரும் வழியில் ஆபத்தில் போய் முடியலாம் என அஞ்சப்படுகிறது.