
கோலாலம்பூர், பிப்ரவரி-21- 2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டை விளம்பரப் படுத்தும் முழு பிரச்சார வீடியோவுக்கான செலவு 1.9 மில்லியன் ரிங்கிட்டாகும்.
அவ்வீடியோ 40 நிமிடங்களுக்கு ஓடுமென சுற்றுலா, கலை, பண்பாடு அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் கூறினார்.
மக்களவையில் மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கேட்ட கேள்விக்கு அமைச்ர் பதிலளித்தார்.
இந்த விளம்பர வீடியோ தயாரிப்பு, முறையான டெண்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து ஒப்புதல்களும் நிதி அமைச்சிடமிருந்து பெறப்பட்டன.
டீசர் எனப்படும் ஒரு முன்னோட்ட வீடியோ மட்டும் அமைச்சுக்கு இலவசமாக செய்துகொடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
முழு 40 நிமிட வீடியோவைத் தவிர, அந்தந்த மாநிலங்கள் மற்றும் குறிப்பிட்ட சுற்றுலா அம்சங்களில் கவனம் செலுத்தும் சிறு சிறு வீடியோக்களும் உள்ளன.
இதற்கு முன் வெளியிடப்பட்ட டீசர் வீடியோவில் நாட்டின் பெரும்பான்மையினரான முஸ்லீம்களின் கூறுகள் போதுமான அளவில் இடம்பெறவில்லை என பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளின் இளைஞர் பிரிவுகள் பிரச்னை எழுப்பின.
இந்து ஆலயங்கள் மற்றும் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு வீடியோவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாக அவை குற்றம் சாட்டியதால் சர்ச்சையானது.
ஆனால் அது வெறும் டீசர் வீடியோ மட்டுமே; பின்னர் வெளியிடப்படும் முழு வீடியோவில் அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் என டத்தோ ஸ்ரீ தியோங் ஜனவரி 9-ஆம் தேதி உறுதியளித்திருந்தார்.