புத்ராஜெயா, ஆகஸ்ட்-29 – 2027 சீ விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்த மலேசியா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
பிரதமர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவெடுக்கப்பட்டதாக, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு அறிக்கையொன்றில் கூறியது.
சபா, சரவா, பினாங்கு ஆகிய மூன்று மாநிலங்களும் தத்தம் சொந்த நிதி ஒதுக்கீட்டில் கோலாலம்பூருடன் இணைந்து அப்போட்டியை நடத்த முன் வந்துள்ளன.
அவை வழங்கியுள்ள கடப்பாட்டின் அடிப்படையில், மலேசியாவுக்கு சீ போட்டி சம்மேளனம் விடுத்துள்ள அழைப்பைப் ஏற்றுக் கொள்வதென அமைச்சரவை முடிவுச் செய்துள்ளது.
2027 சீ போட்டியை நடத்துவதிலிருந்து புருணை விலகிக் கொண்டதை அடுத்து, சீ போட்டி சம்மேளனம் அவ்வாய்பை மலேசியாவுக்கு வழங்கியது.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சீ போட்டியை மலேசியா ஏற்று நடத்துவது இது ஏழாவது முறையாகும்.
கோலாலம்பூர் ஆகக் கடைசியாக 2017-ஆம் ஆண்டு சீ போட்டியை ஏற்று நடத்தியது.
அப்போது 145 தங்கப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த வெற்றியாளராகவும் மலேசியா வாகை சூடியது.
தென்கிழக்காசியாவின் ‘மினி ஒலிம்பிக்’ என அழைக்கப்படும் சீ போட்டியில் தீமோர் லேஸ்தே (Timor Leste) உள்ளிட்ட 11 நாடுகள் பங்கேற்று வருகின்றன.