கூச்சிங், ஆகஸ்ட் -25, 2027 சீ விளையாட்டுப் போட்டியை மலேசியா ஏற்று நடத்தலாமென பிரதமர் கோடி காட்டியுள்ளார்.
அது சாத்தியமானால், கோலாலம்பூருடன் இணைந்து சரவாக்கும் உபசரணை அணியாக விளங்க தமக்கும் சம்மதமே என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
எனினும், அதற்கு முன்பாக 2027 சீ போட்டியை மலேசியா ஏற்று நடத்துமா இல்லையா என்பது வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படுமென்றார் அவர்.
சுக்மா எனப்படும் 21-வது மலேசிய விளையாட்டுப் போட்டிகளை கூச்சிங்கில் நிறைவுச் செய்து வைத்து உரையாற்றிய போது பிரதமர் அவ்வாறு சொன்னார்.
சுக்மாவை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளதன் அடிப்படையில், சீ போட்டியை இணைந்து நடத்தும் ஆற்றல் சரவாக்கிற்கு இருப்பதாக அன்வார் நம்பிக்கைத் தெரிவித்தார்.
சீ போட்டியை இணைந்து நடத்த வாய்ப்பளிக்கப்பட்டால், அதற்கு மொத்தமாகச் செலவாகுமென எதிர்பார்க்கப்படும் 70 கோடி ரிங்கிட்டில் பாதியை ஏற்றுக் கொள்வதாக சரவாக் அரசாங்கம் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
2027 சீ போட்டியை நடத்துவதிலிருந்து புருணை விலகிக் கொண்டதை அடுத்து, சீ போட்டி சம்மேளனம் அவ்வாய்பை மலேசியாவுக்கு வழங்கியது.
அரசாங்கத்தின் நிதி நிலைமையைப் பொருத்தே அவ்வாய்ப்பை ஏற்பதா இல்லையா என்று முடிவெடுக்கப்படுமென, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ முன்னதாகக் கூறியிருந்தார்.