குவாலா குபு பாரு, மே-7 – எதிர்கட்சிக் கூட்டணி பெரிக்காத்தான் நேஷனலின் ஆகப் புதிய உறுப்புக் கட்சியான MIPP எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி, குவாலா குபு பாருவில் அக்கூட்டணி வேட்பாளருக்கு மும்முரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நாடு சுதந்திர அடைந்த நூற்றாண்டான 2057-ல் இந்நாட்டு இந்தியர்கள் வளர்ச்சியடைந்த சமுதாயமாக உருமாறும் கனவை நிறைவேற்ற இலக்கு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அரசியல் அரங்கில் புதியக் கட்சி என்றாலும், இந்தியச் சமூகத்துக்கான தூரநோக்குப் பார்வையுடன் தாங்கள் களமிறங்கியிருப்பதாக MIPP தலைவர் பி.புனிதன் கூறியுள்ளார்.
முந்தைய மற்றும் நடப்பு அரசாங்கங்களின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் ஏற்பட்ட விரக்தியில் பிறந்த கட்சி என்பதால், அடுத்த 33 ஆண்டுகளில் அந்த உன்னத இலக்கை அடையை தாங்கள் போராடப்போவதாக அவர் விளக்கினார்.
இன்னும் 3 ஆண்டுகளில் வரவிருக்கும் அடுத்தப் பொதுத் தேர்தலின் போது பெரிக்காத்தான் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில், MIPP-யின் அந்த 2057 கனவுத் திட்டம் நிச்சயம் இடம் பெறும்.
இந்தியர்களின் பொருளாதார உயர்வை மையப்படுத்தும் அந்த 2057 உருமாற்றத் திட்டத்தை முன்னெடுக்க, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
இந்திய வாக்காளர்களை பெரிக்காத்தான் பக்கம் இழுக்க, அத்திட்டம் தங்களுக்குப் பக்க பலமாக இருக்கும் என பெரிக்காத்தான் கூட்டணி தலைவர்களில் ஒருவருமான புனிதன் தெரிவித்தார் .
இந்திய வாக்காளர்கள் மத்தியில் MIPP கட்சிக்கு இருக்கும் வரவேற்பைக் கண்டறிவதில், மே 11 குவாலா குபு பாரு இடைத்தேர்தல் முதல் சோதனைக் களமாக அமையும் என்பதையும், ம.இ.கா முன்னாள் உறுப்பினருமான புனிதன் கூறினார்.