ஷா ஆலம், ஆகஸ்ட் 5 – சமீபத்தில் மத்திய அரசின் அறிவிப்புக்கு ஏற்ப சிலாங்கூர் மாநிலத்தில் பணிபுரியும் 21,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்குப் புதிய சம்பள உயர்வு விகிதம் அமல்படுத்தப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்திருக்கிறார்.
எனினும், இந்த அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு விகிதம் மாநிலத்தின் நிதி கையிருப்பு பொறுத்தே அமையும் என்றும் இன்று நடைபெற்ற மாநில அளவிலான ஜாலூர் கெமிலாங் கொடியேற்றம் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் அவர் விளக்கமளித்தார்.
முன்னதாக அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பள அதிகரிப்பு, எதிர்வரும் அக்டோபர் மாதம் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரே அறிவிக்கப்படும் என ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.
இதனிடையே, கடந்த 2013ஆம் ஆண்டு 13 சதவீத அரசு ஊழியர் சம்பள உயர்வு அறிவிப்புக்குப் பிறகு, கடந்த மே 1 ஆம் திகதி நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தே சம்பள மாற்றமே, நாட்டின் வரலாற்றில் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.