
ஈப்போ, ஜன 18 – 26 ஆண்டுகளுக்கு முன்பு பறிபோன 3,641 ஏக்கர் நிலத்திற்காக அதன் 217 பங்குதாரர்களுக்கு சேர வேண்டிய பங்குப் பணத்தை வழங்குவது தொடர்பான விசாரணை ஈப்போ உயர் நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கிறது. வழக்கு விசாரணைக்குப் பிறகு ஒவ்வொரு பங்குதாரருக்கும் எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதை பின்னர் நீதிமன்றம் முடிவு செய்யும்.
பங்குதார்களுக்கும் ஊத்தான் மெலின்தாங் சிம்பாங் அம்பாட் கட்டுமான மேம்பாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான 3641 ஏக்கர் பரப்பிலான நிலம் கடந்த 26 ஆண்டுகளாக இழு பறியாக இருந்து வருகிறது. இந்த செம்பனைத் தோட்டம் சம்பந்தப்பட்ட வழக்கில் மேல் முறையீடு கடந்த 2020 ஆம் ஆண்டு 27 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அதன் 217 பங்குதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
கடந்த 1994 ஆம் தொடக்கத்திலிருந்து 2014 ஆம் ஆண்டு வரையில் அந்த செம்பனை நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட குலைகளுக்கான செலவுகள் போக லாபமாக கிடைத்த தொகை இன்றைய சந்தை விலைப்படி கணக்கிடப்பட்டு நஷ்ட ஈடாக பங்குதாரர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த நிலத்தின் பட்டாவை உள்ளூர் பொருளகம் ஒன்றில் அடமானம் வைக்கபட்டதைத் தொடர்ந்து அந்த நிலத்தை ரீகல் நிறுவனம் பணத்தை செலுத்தி நிலத்திற்கான உரிமையை அதன் பெயருக்கு மாற்றிக்கொண்டதால் ஏமற்றம் அடைந்த பங்குதார்கள் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர். கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவுக்கு வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. விசாரணை நீதிபதி அலுவல் காரணமாக கோலாலம்பூருக்கு சென்றதைத் தொடர்ந்து இந்த வழக்கு மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கை ஏற்று நடத்தும் வழக்கறிஞர் டி. பி. விஜேந்திரனுக்கு உதவியாக வழக்கை ஏற்று நடத்தும் வழக்கறிஞர் எம். மனோகரன் நீதிமன்றத்தில் திரண்டிருந்த பங்குதாரர்களுக்கு விளக்கம் அளித்தார் .