
பாடாங் பெசார், நவ 1 -பாடாங் பெசாரில் நாட்டின் எல்லைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொது பாதுகாப்பு படையினர் 217,000 ரிங்கிட் மதிப்புள்ள 70 கிலோ கஞ்சாவுடன் ஒரு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். பாடாங் பெசாரில் ஒரு கிராமத்திற்கு அருகேயுள்ள ரப்பர் தோட்டத்தில் ரோந்து பணியின்போது அந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பெர்லீஸ் மாநில போலீஸ் தலைவர் முஹம்மட் அப்துல் ஹலீம் தெரிவித்தார். அதோடு நான்கு சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். எல்லைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மூலமாக நாட்டிற்குள் புகுந்த ஆடவன் ஒருவன் போலீல்காரர்களை பார்த்து மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோடினான். அந்த மோட்டார் சைக்கிளிலிருந்து இரண்டு வெவ்வேறு பைகளில் தலா 32 கிலோ மற்றும் 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முஹம்மட் அப்துல் ஹலீம் கூறினார்.