
ஜோகூர் பாரு, மார்ச்-29- 218-ஆவது போலீஸ் தினத்தையொட்டி, ஜோகூர் மாநில இந்து போலீஸ்காரர்கள் அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடத்தினர்.
மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் அவரின் துணைவியாரும் PERKEP எனப்படும் ஜோகூர் போலீஸ் குடும்ப சங்கத்தின் தலைவியுமான டத்தின் ஷாந்தினி சந்தானம் பிள்ளையும் அதற்குத் தலைமையேற்றனர்.
சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளுடன், மாற்றுத் திறனாளிகளுக்கும் வசதி குறைந்தோருக்கும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
கலாச்சார பண்பாட்டு நடனங்களும் படைக்கப்பட்டன.
ஜோகூர் போலீஸ் படையைச் சேர்ந்த இந்து போலீஸ்காரர்கள், அவர்களின் குடும்பத்தினர், சுற்று வட்டார மக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஓய்வுப் பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஜோகூர் மாநிலத் தலைவர் டத்தோ சுகுமாறன் ராமன், இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ACP குமரேசன் முனியாண்டி, வட ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.