23 வயதுக்குட்பட்ட மலேசிய காற்பந்து குழு பயிற்சியாளர் இளவரசன் விலகல்

கோலாலம்பூர். செப் 18 – 23 வயதுக்குட்பட்ட மலேசிய காற்பந்து குழுவின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து E .இளவரசன் விலகினார். தமது இந்த முடிவு குறித்து மலேசிய காற்பந்து சங்கத்துடன் விவாதித்ததோடு ஹரிமாவ் மலாயா குழுவை அமைப்பது தொடர்பில் தேசிய காற்பந்து குழுவின் பயிற்சியாளர் கிம் பான் கோனுக்கு உதவப் போவதாக இளவரசன் தெரிவித்தார். ஆசிய கிண்ண காற்பந்து போட்டிக்கு மலேசியா தகுதி பெற்ற போதிலும் இளவரசன் பயிற்சி முறை குறித்து காற்பந்து ரசிகர்கள் குறைகூறியுள்ளனர்.
தேசிய காற்பந்து குழுவின் துணை பயிற்சியாளராக இருந்துவரும் இளவரசன் கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்ரேலியாவின் பிராட் மலோனிக்குப் பதில் 23 வயதுக்கு உட்பட்ட தேசிய காற்பந்து குழுவின் பயிற்சியாளர் பொறுப்பையும் கவனித்து வந்தார். கடந்த ஒரு ஆண்டு காலம் அவரது தலைமையில் செயல்பட்டு வந்த ஹரிமாவ் மூடா குழு இவ்வாண்டு மெர்லியன் கோப்பை (Merlion Cup) காற்பந்து போட்டியில் வெற்றி பெற்றது. அதோடு கடந்த மாதம் தாய்லாந்தின் ராயோங்கில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட ஆசியான் காற்பந்து சம்மேளன காற்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கும் மலேசிய குழு தகுதிபெற்றது.