
லண்டன், ஜன 8 – ஆப்கானிஸ்தான் போரின் போது 25 தலிபான் போராளிகளை தாம் கொன்றதாக கூறி, தமது குடும்பத்தை பேராபத்தில் தள்ளியிருப்பதாக, பிரிட்டன் இளவரசர் ஹெரி, குறை கூறப்பட்டிருக்கின்றார்.
அப்போரில் ஈடுபட்ட விபரங்களை வெளியிட்டதன் வாயிலாக, ஹெரியும் அவரது குடும்பத்தினரும் தற்போது தீவிரவாதிகளின் குறியாகியிருக்கின்றனர் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
முன்னதாக தலிபான் நிர்வாகம், ஹெரியினை கடுமையாக குறை கூறியதோடு, ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் உள்ள டுவிட்டர் பயனர்கள் ஹெரியை, ‘கொலையாளி’ எனவும் முத்திரை குத்தியிருக்கின்றனர்..
ஹெரியின் சுயசரிதை அடங்கிய ‘ Spare’ புத்தகம் இன்னும் வெளியாகாத நிலையில், அதிலிருந்து கசிந்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் ஹெரி , தாம் ஆப்கானிஸ்தானில், ராணுவ ஹெலிகப்டர் விமானியாக செயல்பட்டபோது , 25 தலிபான்களைக் கொன்றதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் , ராணுவ சேவையின் போது தாம் மனித உயிரை பறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அதற்காக தாம் பெருமையோ சங்கடமோ படவில்லை என குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.