புது டெல்லி, ஏப்ரல் 9 – அமெரிக்கா, க்ளீவ்லேண்ட் ஸ்டேட் (Cleveland State) பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ளச் சென்ற, 25 வயது இந்திய மாணவர் ஒருவர் இறந்து கிடக்க காணப்பட்டதை, நியூயார்க்கிலுள்ள, இந்திய தூதரகம் இன்று உறுதிப்படுத்தியது.
இந்தியா, ஹைதராபாத்தை சேர்ந்த அம்மாணவர், கடந்தாண்டு மேற்கல்வியை தொடர அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த மூன்று வாரங்களாக, முஹமட் அப்துல் அர்பாத் எனும் அம்மாணவரை காணவில்லை என கூறப்பட்டு வந்து வேளை ;
அவரை கண்டுபிடிக்க, அவரது குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அமலாக்க அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்திய தூதரகம் கூறியிருந்தது.
தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில், ஓஹியோவிலுள்ள, கிளீவ்லேண்டில், அப்துல் இறந்து கிடக்க காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்திய தூதரகம் தமது X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.
அச்சம்பவம் தொடர்பில், முழு விசாரணை மேற்கொள்ளப்படுவது உறுதிச் செய்யப்படுமெனவும், அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்ச் ஏழாம் தேதி, ஆகக் கடைசியாக அப்துலிடம் தொலைப்பேசி வாயிலாக பேசிய அவரது தந்தை, அதன் பின்னர் அப்துல்லை தொடர்புக் கொள்ள முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
மார்ச் 19-ஆம் தேதி, போதைப் பொருள் விநியோக கும்பல் ஒன்றால் அப்துல் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்க வேண்டுமானால், ஆயிரத்து 200 டாலர் பிணைப் பணம் தர வேண்டுமென கோரி, அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.