
கோலாலம்பூர், அக் 3 – நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் உட்பட பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களால் MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 29 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம்வரை பிரபல பிரமுகர்கள் மற்றும் பொது நலன் சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பாக 776 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதோடு , 869பேர் கைது செய்யப்பட்டதும் இந்த நடவடிக்கைளில் அடங்கும் என எம்.ஏ.சி.சியின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசாம் பாகி தெரிவித்தார்.
அதோடு நீதிமன்றங்களில் 326 குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டதும் இவற்றில் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு இவ்வாண்டு பெரிய அளவில் இருந்துள்ளது குறித்தும் எம்.ஏ.சி.சி மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார். 2018ஆம் ஆண்டு முதல் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும அபராதங்களின் மூலம் வசூலிக்கப்பட்ட மொத்த மதிப்பு 29 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமாகும் என ஆசாம் பாகி கூறினார்.