
கோலாலம்பூர், ஆக 2 – மியன்மார் ஆடவர் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளையும் கெப்போங் MRR 2 மேம்பால நெடுஞ்சாலையின் 20 மீட்டர் உயரத்திலிருந்து கீழே தூக்கி எறிந்து விட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டார். அச்சம்பவத்தில் 8 வயது சிறுமி மற்றும் 4 வயது சிறுவனும் உயிரிழந்தனர்.
மற்றொரு 5 வயது சிறுவன் கடுமையாக காயம் அடைந்த நிலையில் செலாயாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் Beh Eng lai தெரிவித்தார்.
விடியற்காலை மணி 5.50 அளவில் அந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவரிடமிருந்து போலீஸ் புகார் பெற்றுள்ளதாக Beh Eng Lai கூறினார்.
Desa Jaya போக்குவரத்து சமிக்ஞை விளக்கிற்கு அருகே 38 வயதுடைய அந்த ஆடவரும் அவரது மூன்று பிள்ளைகளும் சாலையோரத்தில் விழுந்து கிடந்ததை போலீசார் கண்டனர் . சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே தனது இரு பிள்ளைகளுடன் அந்த ஆடவரும் இறந்து கிடந்தார்.
அந்த ஆடவர் இடது கையில் ஒரு குழந்தையையும் மற்றொரு பிள்ளையை வலது கையிலும் பிடித்திருந்ததோடு முதுகில் மாட்டியிருந்த மற்றொரு பேக்கில் 5 வயது சிறுவனை வைத்திருந்ததாகவும் இச்சம்பவத்தை நேரில் பார்த்த 36 வயதுடைய சாட்சி ஒருவர் தெரிவித்ததாக Beh Eng Lai வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சாட்சி அந்த நபரை நெருங்கியபோது திடீரென அவர் தமது பிள்ளைகளை பாலத்திலிருந்து கீழே தூக்கி எறிந்துவிட்டு தாமும் குதித்ததாக கூறப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் சவப் பரிசோதனைக்காக கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.