ஜோகூர், அக்டோபர் 8 –
ஜோகூரில், 30 ஆண்டுகளாக இந்தியச் சமூகத்தால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈமச் சடங்கு மையத்தின் அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது.
Teluk Jawa-வில் 0.66 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த மையம் கட்டப்படுகிறது என Sultanah Rogayah அறவாரியத்தின் தலைவர் டத்தோ ஆர். சுகுமாரன் தெரிவித்தார்.
இந்த நிலத்தை ஒதுக்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்-மிற்கு ஜோகூர் இந்திய சமூகத்தின் சார்பில் அவர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
Sugu speech
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் திகதி அன்று, மெந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் இந்த ஈமச் சடங்கு மையத்தின் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்தைக் கையாளும் பொறுப்பை Sultanah Rogayah அறவாரியத்திடம் ஒப்படைத்தாக டத்தோ சுகுமாரன் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், ஜோகூர் பாரு நில அலுவலகத்திடமிருந்து ஒப்புதல் கடிதம் கிடைத்ததாகவும், நில உரிமக் கட்டணமாக 10,530 ரிங்கிட் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கி, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவடையும் என்றார், அவர்.
இத்திட்டத்திற்கு மாநில அரசிடமிருந்து 1.224 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு கிடைத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். அதற்காக ஜோகூர் மெந்திரி பெசார், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரவின் குமார் ஆகியோருக்கு டத்தோ சுகுமாரன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பின், ஈமச்சடங்கிற்கான நிலையான இயக்க நடைமுறைகள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
2018-யில் தொடங்கப்படவிருந்த இந்த மையம், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பாரிசான் நேஷனல் மாநில அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னர் 2022-யில், தஞ்சுங் லாங்சாட்டில் (Tanjung Langsat) அடிக்கல் நாட்டு விழா நடந்தும், பாதுகாப்பு காரணங்களுக்காக தெலுக் ஜாவாவிற்கு இடம் மாற்றப்பட்டு, இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தேறியது.