சிகாம்புட், ஆகஸ்ட்-8 – கோலாலம்பூர், சிகாம்புட்டில் உள்ள தாமான் ஸ்ரீ சீனார் சமூக மண்டபம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ருக்குன் தெத்தாங்காவால் கட்டப்பட்டதாகும்.
அப்படியிருக்க, அது எப்படி சட்டவிரோத கட்டுமானமாகுமென, மலேசிய இந்திய விளையாட்டு மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் டத்தோ டி.மோகன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவ்விவகாரம் குறித்து சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினரும், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான ஹானா இயோ, நேற்று தனது facebook பதிவில் குறிப்பிட்ட விஷயங்களுக்கு பதிலடியாக மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அச்சமூக மண்டபம் இத்தனை காலமும் ஹயாஷி கராத்தே மாணவர்களின் பயிற்சி இடமாக விளங்கி வந்துள்ளது.
இப்போது, திடீரென அது சட்டவிரோதக் கட்டுமானமாக அறிவிக்கப்படுவது விந்தையிலும் விந்தையாக உள்ளதென முன்னாள் செனட்டருமான மோகன் சாடினார்.
அப்பகுதி வாழ் மக்களில் யாரும் அப்பயிற்சி மையம் குறித்து புகாரளிக்கவில்லை; ஆக, கண்டிப்பாக ஏதோ அரசியல் அழுத்தம் காரணமாகவே அம்மண்டம் இடிக்கப்பட்டுள்ளது.
அங்கு கராத்தே பயிற்சிப் பெற்ற மாணவர்களில் ஏராளமானோர் வறுமைக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்; அவர்களுக்கு மிக தோதுவான இடமாக அம்மண்டபம் இருந்துள்ளது; அதை விட முக்கியம், அவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டுமே சார்ந்த மாணவர்கள் அல்ல, மாறாக பல்லின மக்கள்.
தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வழி வகைகளை ஹானா இயோ முன் வைத்திருக்க வேண்டும்.
உண்மையிலேயே பொறுப்பானவராக இருந்திருந்தால், நாட்டுக்கு பல வீரர்-வீராங்கனைகளைத் தந்த அந்த பயிற்சி மையத்தை எப்பாடு பட்டாவது உடைபடாமல் அவர் தடுத்திருக்க வேண்டும்.
அதை விடுத்து, facebook-கில் பொறுப்பற்ற அறிக்கைகளை விடக் கூடாது என மோகன் காட்டமாக சொன்னார்.
ஹானா இயோ, நேற்று தனது facebook பக்கத்தில் அந்த சமூக மண்டபம் இடிக்கப்பட்டது, இன விவகாரமோ அல்லது விளையாட்டு தொடர்பானதோ அல்ல என விளக்கமளித்தார்.
மாறாக, அரசாங்க நிலத்தில் சட்டவிரோத குடியேற்றத்தைக் கையாளும் ஊராட்சி மன்றத்தின் நடவடிக்கையே அதுவென விளக்கியிருந்தார்.