
ஈப்போ, செப். 11 – தமிழர்களின் பாரம்பரிய வாத்தியக் கருவியான ஆதிபறை தப்பு மேளத்தின் 380 கலைஞர்களைக் கொண்டு 30 நிமிடங்கள்வரை இடைவிடாமல் தொடர்ந்து தப்படித்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியில் செபஸ்டியர் கலைக்கூடம் ஈடுபட்டது. இந்த நிகழ்வில் எட்டு வயது சிறுமி ஜே.ஷாமணியும் கலந்துகொண்டது அந்த நிகழ்வைக் காண வந்திருந்த பலரை வியப்பியில் ஆழ்ந்தியது. பாகான் டத்தோ ஊத்தான் மெலிந்தாங்கைச் சேர்ந்த ஷாமணி 30 நிமிடங்களுக்கு இடைவிடாமல் தப்படித்தார். கடுமையான வெயில் சவாலாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் ஷாமணி உட்பட அனைத்து கலைஞர்களும் தங்களது முழுத் திறனையும் வெளியிப்படுத்தினர்.
தேசிய தினத்தை முன்னிட்டு மலேசியா சாதனை புத்தகத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அந்த கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 4 வயது முதல் தப்பு மேளம் அடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கோலா பெர்னம் தமிழ்ப்பள்ளி மாணவியான ஷாமணி கூறினார். தமது மாமாவிடமிருந்து இதனை கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். வாரத்திற்கு மூன்று நாட்கள் ஆலயம் மற்றும் இதர இந்திய கலச்சார நிகழ்ச்சியில் தாம் தப்பு அடிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதாக ஷாமணி தெரிவித்தார்.
இதனிடையே இந்தக் கலைக்கும் கலைஞர்களுக்கும் உரிய அங்கீகாரத்தை நமது சமுதாயம் வழங்கவில்லை. ஆலயங்களில் இந்த இசைக்கலைக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. எனவே, சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப கலைஞர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றும் செபஸ்டியர் கலைக்கூடத்தின் இயக்குநர் டாக்டர் இருதயம் செபஸ்டியர் தெரிவித்தார்.
முதன்முறையாக அதிகமான கலைஞர்களைக் கொண்டு நீண்ட நேரம் வாசித்து சாதனைப் படைக்கவேண்டும் என்ற நோக்கம் வெற்றிகண்டுள்ளது. நாடு தழுவிய நிலையில் 22 குழுக்கள் கலந்துகொண்டன. நிகழ்ச்சி வெற்றிபெற ஆதரவும் நிதியுதவியும் வழங்கிய அனைவருக்கும் டாக்டர் இருதயம் செபஸ்டியர் நன்றி தெரிவித்துக்கொண்டார். நேற்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின் சாதனையை ஐவர்கொண்ட குழு உறுதிசெய்த பிறகு மலேசிய சாதனைப் புத்தக அமைப்பின் அங்கீகாரத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய பேராசிரியர் டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், பாரம்பரியக் கலையான ஆதிபறை தப்பு மேளம் குறித்து சிறப்பான விளக்கமளித்தார். மேலும் வருமாண்டு ஜனவரி மாதம் நடைபெறும் அருணகிரிநாதர் விழாவில் இந்தக் கலைக்கும் கலைஞர்களுக்கும் பங்குகொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்றும் மலேசிய அருணகிரிநாதர் இயக்கத் தலைவருமான அவர் வருணித்தார்.