பட்டர்வொர்த், ஏப்ரல் 5 – 300 கிலோமீட்டருக்கு மேலான பயணங்களை மேற்கொள்ளும் விரைவுப் பேருந்துகளில், பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, இரண்டாவது ஓட்டுனர்கள் இருக்க வேண்டும்.
நான்கு மணி நேரத்திற்கும் கூடுதலான பயணங்களுக்கும் அந்த நிபந்தனை பொருந்தும்.
விரைவுப் பேருந்து ஓட்டுனர்கள், போதுமான ஓய்வு பெறுவதை உறுதிச் செய்யவும், விபத்துகள் குறிப்பாக உயிரிழப்புகளை உட்படுத்திய விபத்துகளை தவிர்க்கவும் அது உதவுமென, பினாங்கு சாலை போக்குவரத்து துறை இயக்குனர் ஜுல்கிப்ளி இஸ்மாயில் தெரிவித்தார்.
எனினும் பல விரைவுப் பேருந்து நிறுவனங்கள் அதனை பின்பற்றுவதில்லை.
பல சமயங்களில், அடுத்த பேருந்து நிறுத்ததில், இரண்டாவது ஓட்டுனர் பேருந்தில் ஏறிக் கொள்வார் என காரணங்கள் கூறப்படுகின்றன.
ஆனால், பயணத்தை தொடங்கும் போதே பேருந்தில் இரண்டாவது ஓட்டுனர் இருக்க வேண்டும் என்பது தான் விதிமுறை ஆகும்.
இவ்வேளையில், ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி நேற்று வரை, பினாங்கில் 121 விரைவுப் பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளை ; அதில் ஐந்து பேருந்துகளில் இரண்டாவது ஓட்டுனர் இல்லை என்பதையும் ஜுல்கிப்ளி சுட்டிக்காட்டினார்.
ஒட்டுமொத்தமாக நான்காயிரத்து 553 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் பல்வேறு குற்றங்களுக்காக இதுவரை ஆயிரத்து 377 போக்குவரத்து குற்றப்பதிவுகள் வெளியிட்டப்பட்டுள்ளன. இம்மாதம் 20-ஆம் தேதி வரையில் அச்சோதனை தொடரும்.