கோலாலம்பூர், நவம்பர்-15 – நாட்டில் 300,000 ரிங்கிட் முதல் 500,000 ரிங்கிட் விலையிலான வீடுகளே அதிகம் விற்கப்படாமலிருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்தம் 2.78 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அத்தகைய 7,003 வீடுகள் விற்கப்படவில்லை என, தேசிய நில சொத்துடைமை தகவல் மையம் (NAPIC) கூறியது.
இரண்டாமிடத்தை 500,000 ரிங்கிட் முதல் 1 மில்லியன் ரிங்கிட் விலையிலான வீடுகள் பிடித்துள்ளன.
இந்த காலாண்டில் மொத்தமாக விற்கப்படாமலிருக்கும் 21,968 வீடுகளில், 500,000 முதல் 1 மில்லியன் ரிங்கிட் விலையிலான 6,462 unit வீடுகளும் அடங்கும்.
300,000 ரிங்கிட்டுக்கும் கீழ் விலை கொண்ட வீடுகளில் 5,999 வீடுகள் விற்கப்படவில்லை.
வீடுகளின் அமைப்பு வாரியாகப் பார்த்தால், ஆக அதிகமாக விற்கப்படாமலிருப்பது அடுக்குமாடி வீடுகளே.
13,455 அடுக்குமாடி வீடுகள் விற்கப்படாத நிலையில், அதற்கடுத்தடுத்த நிலைகளில் terrace வீடுகளும், மற்ற வகை வீடுகளும் உள்ளன.
இடவாரியாக ஒப்பிட்டால், ஆக அதிகமாக கோலாலம்பூரிலும், அதற்கடுத்த நிலையில் பேராக் மற்றும் ஜோகூரிலும் அதிகளவில் வீடுகள் விற்கப்படாமலிருக்கின்றன.
கட்டி முடிக்கப்பட்ட ஆண்டுகள் வாரியாகப் பார்த்தால், 5 முதல் 10 ஆண்டுகள் ஆன வீடுகள் அதிகளவில் விற்பனையாகாமலிருக்கின்றன.
மூன்றாண்டுகளுக்கும் கீழ்பட்ட வீடுகள் அடுத்த இடத்தில் உள்ளன.