3,087 சாலை விபத்து மரணங்களில் இரண்டுக்கு மது காரணம் – அந்தோணி லோக்

கோலாலம்பூர், அக்டோபர் 31 –
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மொத்தம் 3,087 சாலை விபத்து மரணங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றில் 2 சம்பவங்கள் மது அருந்திய நிலையில் வாகனமோட்டியவர்களால் விளைந்தவையாகும்.
மதுபோதையில் வாகனமோட்டுவது என்பது 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டத்தின் 44, 45 மற்றும் 45A பிரிவுகளின் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது.
இது மதுபோதையில் வாகனமோட்டுதல் அல்லது வாகனத்தைப் பராமரித்தல் மூலம் மரணம், காயம் அல்லது அனுமதிக்கப்பட்ட மதுவின் வரம்பை மீறுதல் போன்ற குற்றச்செயல்களை உள்ளடக்குகிறது.
இந்த புள்ளிவிவரங்களை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், மக்களவையில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரசாலி வான் நூரின் எழுத்துப்பூர்வ கேள்விக்கு அளித்த பதிலில் வெளியிட்டார்.
2022 ஜனவரி முதல் இவ்வாண்டு ஜூன் வரையில் மதுபோதையில் வாகனமோட்டியவர்களுக்கெதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அக்கேள்வி கேட்டப்பட்டிருந்தது.



