கோலாலம்பூர், செப்டம்பர் -24 – 4 மனைவியர், 34 பிள்ளைகள். பிள்ளைகளின் பெயர்கள் கூட தெரியாத அவல நிலை.
34 பேரில் 32 பிள்ளைகள் எங்கிருக்கிறார்கள் என்றும் சந்தேக நபருக்குத் தெரியவில்லை.
குளோபல் இக்வான் நிறுவனத்திற்கு எதிரான விசாரணையில் தாங்கள் சந்தித்த காட்சிகளில் அதுவும் ஒன்று என தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razarudin Husain) கூறினார்.
இவ்வேளையில், குளோபல் இக்வான் நிறுவனத்தின் சிறார் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என்ற போர்வையில் செயல்பட்டு வந்துள்ளன.
பொது மக்களிடமிருந்து நன்கொடைத் திரட்டுவதை எளிதாக்கும் நோக்கில் அந்த ஏமாற்று வேலை நடத்தப்படுவதாக IGP சொன்னார்.
அதை விட கேவலம் என்னவென்றால், அங்குள்ள சிறார்கள் தாங்கள் ‘அனாதைக்’ குழந்தைகள் போன்றே சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் பலருக்கு குறிப்பாக 12 வயதுக்குக் கீழ்பட்ட குழந்தைகளுக்கு சொந்த பெற்றோர்களையே அடையாளம் தெரியாமலிருப்பது வேதனை என்றார் அவர்.
விசாரணைக்காகக் கைதான சில பெற்றோர், மீட்கப்பட்ட குழந்தைகள் தங்களின் சொந்தக் குழந்தைகள் என்பதை ஒப்புக் கொள்ளவும் இல்லை.
அந்த அளவுக்கு குளோபல் இக்வானின் சிந்தாந்தத்தில் அவர்கள் ஊறிப்போயிருக்கின்றனர்.
திரட்டப்படும் நன்கொடைகளும் வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக IGP கூறினார்.