மலாக்கா, ஆகஸ்ட் -15 – சொல்லியபடி வேலை தராமல் 15 நாட்களாக முதலாளியால் மலாக்கா தெங்காவில் உள்ள வீட்டொன்றில் அடைத்து வைக்கப்பட்ட 36 வங்காளதேச ஆடவர்களைக் குடிநுழைவுத்துறை காப்பாற்றியுள்ளது.
இடநெருக்கடியான மற்றும் அசுத்தமான சூழலில் அவர்கள் தங்கியிருந்தது கண்டு, சோதனைக்குச் சென்ற அதிகாரிகளே அதிர்ச்சிக்குள்ளானதாக, மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் அனிர்வான் ஃபாவ்சீ மொஹமட் அய்னி (Anirwan Fauzee Mohd Aini) தெரிவித்தார்.
பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடியற்காலை வரை அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதிகாரிகள் உள்ளே நுழைந்தபோது 36 பேரும் ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டு படுத்துறங்கிக் கொண்டிருந்தனர்.
மீட்கப்பட்ட வங்கதேச பிரஜைகளிடம் முறையான பயண பத்திரமும் இல்லை.
இதையடுத்து விசாரணைக்கு வந்துதவுமாறுக் கூறி, சம்பந்தப்பட்ட முதலாளிக்கு 2 சம்மன்கள் வெளியிடப்பட்டன.