
கோலாலம்பூர், நவ 21 -இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம்வரை 365 மில்லியன் ரிங்கிட் இழப்புக்களை உள்ளடக்கிய இல்லாத 15 முதலீடுகள் குறித்து புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாண்டின் முதல் 10 மாத காலத்தில் இல்லாத முதலீடுகள் தொடர்பில் 4,435 விசாரணைகளை தாங்கள் தொடங்கியிருப்பதாக வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசுப் தெரிவித்திருக்கிறார். இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை இணையத் தளம் மூலமாக நடைபெற்ற 4,051 மோசடி சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டன. நேருக்கு நேர் அறிமுகமானவர்கள் சம்பந்தப்பட்ட 384 முதலீடுகள் மீதான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
முதலீடுகளில் ஈடுபட்டவுடன் முதல் மூன்று மணி நேரம் முதல் ஆறு மணி நேரங்களுக்கு 51 மடங்கு ஆதாயங்கள் கிடைக்கும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட இல்லாத முதலீட்டு திட்டங்கள் தொடர்பான புகார்களும் அடங்கும் என ரம்லி தெரிவித்தார். முகநூல், வாட்ஸ்அப், டெலிக்ராம் மற்றும் டிக் டொக் வாயிலாக முதலீடுகளுக்கான பங்குகள் ,இலக்கவியல் கரன்சி போன்ற மோசடி திட்டங்களில் பொதுமக்களை இலக்காகக் கொண்டு மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 300 ரிங்கிட் முதல் 2,000 ரிங்கிட்வரையில் ‘Mida’ வின் பெயரை பயன்படுத்தியும் போலி முதலீட்டு திட்டத்தை மோசடி கும்பல் பயன்படுத்தியிருப்பதும் விசாரணை மூலம் கண்டறியப்பட்டதாக அவர் கூறினர்.