
கஜகஸ்தான், செப்டம்பர் 28 – 371 நாட்கள் மிக நீண்ட காலம் விண்வெளியில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்ட நாசா விண்வெளி வீரர் பிராங்ப் ரூபியோவும் (Frank Rubio), அவரது குழுவினரும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.
2022-ஆம் ஆண்டு, செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கிய அவர்களின் அந்த வரலாற்றுப்பூர்வ பயணம், இதுவரை நாசா மேற்கொண்ட மிக நீண்ட ஒற்றை விண்வெளி பயணமாக கருதப்படுகிறது.
கஜகஸ்தான் நேரப்படி, அதிகாலை மணி 3.54 வாக்கில், அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்ட அவர்கள், காலை மணி 7.17 வாக்கில், டிஜெஸ்கஸ்கான் நகரின், தொலைத்தூரப் பகுதியில் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
அந்த பயணத்தின் போது, ரூபியோ மொத்தம் ஐயாயிரத்து 936 முறை சுற்றுப்பாதைகளை வலம் வந்து, 15 கோடியே 70 லட்சம் மைல்களுக்கு மேல் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
ரூபியோவின் அந்த பயணம், விண்வெளி பயணங்களில் பதிவுச் செய்யப்பட்டிருக்கும் மேலும் ஒரு மைல்கள் எனவும், எதிர்காலத்தில், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மேற்கொள்ளப்படவிருக்கும் நீண்டகால விண்வெளி பயணங்களுக்கான நுண்ணறிவை வழங்கும் எனவும் கூறப்படுகிறது.