
நியூசிலாந்து, செப்டம்பர் 30 – தோண்ட தோண்ட பல அதிசயங்களை உள்ளடக்கி இருக்கும் பசிபிக் பெருங்கடலில், பல நூற்றாண்டுகளாக மூழ்கிக் கிடக்கும் உலகின் எட்டாவது கண்டத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகில் தற்போது வரை, ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஏழு கண்டங்கள் உள்ளன.
ஆழ்கடலில் இருந்து திரட்டப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் அந்த புதிய கண்டத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.
அந்த புதிய கண்டத்திற்கு ஜீலந்தியா என பெயரிடப்பட்டுள்ளது.
அந்த கண்டம் பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில், நியூசிலாந்துக்கு அருகில், சுமார் 3,500 அடி ஆழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட அந்த கண்டத்தின் 94 விழுக்காட்டு பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது.
எஞ்சிய ஆறு விழுக்காட்டு பகுதியில் தான், நியூசிலாந்தும், அதனை சுற்றி அமைந்துள்ள சில தீவுகளும் உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்நிலையில் அந்த கண்டம் எப்பொழுது தோன்றியது, எதனால் நீரில் மூழ்கியது போன்ற கேள்விகளுக்கு விடைத் தேடும் முயற்சியைத் தொடர்கின்றனர் விஞ்ஞானிகள்.