கோலாலம்பூர், ஆகஸ்ட் -21, நாட்டில் 38 கோடி ரிங்கிட்டுக்கும் மேல் உட்படுத்திய சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.
கண்டறிந்த மாத்திரத்தில் அவற்றை நிதி நிறுவனங்கள் தடுத்து நிறுத்தியதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் (Datuk Amir Hamzah Azizan) தெரிவித்தார்.
இணைய நிதி பரிவர்த்தனைகளின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமுலாக்கம் அதற்கு உதவியிருக்கிறது.
அப்பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதில் பேங்க் நெகாரா மற்றும் உள்ளூர் நிதித்துறை மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது என்றார் அவர்.
பயனர்களின் பெயர்கள், கடவுச் சொற்கள், கடன் அட்டை விவரங்கள் போன்ற தகவல்களை ஒரு நம்பகமான நிறுவனத்தின் மின்னஞ்சல் பெயரில் தந்திரமாக பெறும் சம்பவங்கள் (phishing) குறித்தும்,
மோசடி நடவடிக்கைகைக் கையாளும் தேசிய மையமான NSRC-க்கு கிடைக்கப்பெற்ற புகார்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.
இந்நிலையில், இவ்வாண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள டிஜிட்டல் பாதுகாப்புச் சட்ட மசோதாவின் மூலம், நிதித்துறை மட்டுமின்றி அனைத்து இலக்கவியல் துறைகளிலும் மோசடி தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் மேம்படுத்த முடியுமென அமைச்சர் சொன்னார்.
மோசடிகளைக் களைவதற்கான தேசிய இணையத்தளம் (NFP) அறிமுகவிழாவில் அவர் பேசினார்.