புத்ராஜெயா, ஆகஸ்ட் 20 – நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இன்னும் சில அரசியல் தலைவர்கள் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் 3R எனப்படும் இனம்-மதம்-ஆட்சியாளர்கள் குறித்த விவகாரங்களை கிளப்புவது வருத்தமடையச் செய்வதாக கூறுகிறார் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில்.
மலேசியர்கள் மிதவாதிகள், அன்பாக பழகுபவர்கள். ஒற்றுமையை விரும்புபவர்கள்.
அரசியல் ஆதாயத்திற்காக சில தலைவர்களும் அவர்களின் கூலிப்படைகளும் அவ்வப்போது 3R பிரச்சனையை கிளப்புவதோடு சமூக ஊடகத்தையும் அதற்காக பயன் படுத்துகின்றனர்.
இது போன்ற அரசியல் தலைவர்கள், அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதுதான் சிறந்தது என்றார் ஃபஹ்மி.
தன்னை பொருத்தவரையில், பொதுவாக சமூக ஊடகங்களின் வழி மக்களின் ஒற்றுமையை காணமுடிகின்றது என்றார் ஃபஹ்மி.
நாட்டின் தேசிய கீதத்தை ஒலிபரப்பியதும் போது மக்கள் நிற்பது, தாய் ஒருவர் மலாய் இனத்தைச் சேர்ந்த நோயாளிக்கு உணவு அளிப்பது, என்று பல சமூக ஊடக காணொளிகள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதை படம்பிடித்துக் காட்டுகிறது.
ஆனால் சமூக ஊடகங்களில் சிலர் தங்களின் சுயவிபரங்களை மறைத்து பலர் அவதூறுகளைப் பரவி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாதாரண மலேசியர்கள் ஒற்றுமை உணர்வு கொண்டுள்ளவர்கள் என்பதற்கு என் குடும்பமே ஒரு பெரிய எடுத்துக்காட்டுதான் என்றார் ஃபாமி.. என் பாட்டி அவரின் அனைத்து மகள்களையும் அசுந்தா பள்ளியில்தான் படிக்க வைத்தார்.
அப்பள்ளியில் சிலுவை இருந்தும் என் பாட்டி அது குறித்து அச்சப்படவில்லை. இதுபோன்ற உணர்வுதான் மலேசியர்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
அதற்கு நாட்டின் பல்லின ஒற்றுமை பற்றி இன்றைய இளைஞர்களின் மனதில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டும்.
சுற்றுவட்டார மக்களின் சமயம், கலாச்சாரம் குறித்தும் அறிந்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் ஃபாமி.
இதனிடையே, ஏஷா விவகாரத்தில் எனது கடமையை மட்டுமே நான் செய்தேன். இதற்காக தனக்கு நன்றி தெரிவிக்க வேண்டாம்.
நாட்டில் இணையப் பகடிவதைக்கு இலக்காகி மரணமடையும் இறுதி நபராக ஏஷா மட்டும் இருக்க வேண்டும் என ஃபாமி கேட்டுக் கொண்டார்.
பல்லின மக்களின் ஒற்றுமையே மலேசிய திருநாட்டிற்கு சுபிட்சத்தைக் கொண்டு வரும் என தெரிவித்தார் ஃபஹ்மி ஃபாட்சில்.
அவ்வகையில் நாட்டின் 67ஆவது சுதந்திர தினத்தை மக்கள் தேசப்பற்றுடன் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.