கோலாலம்பூர், நவம்பர்-29, 2022 முதல் கடந்த அக்டோபர் வரை 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய 5,734 சமூக ஊடகப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் மக்களவையில் அதனைத் தெரிவித்தார்.
3R விவகாரங்களைத் தொடும் உள்ளடக்கங்களை முறியடிக்க, குற்றவியல் சட்டம், தேச நிந்தனைச் சட்டம் தவிர, போலீஸ் ஒத்துழைப்புடன் தொடர்பு-பல்லூடகச் சட்டமும் பயன்படுத்தப்படுகிறது.
அமுலாக்க நடவடிக்கைகளைப் பார்த்தால், 3R விவகாரம் தொடர்பில் 145 பேர் விசாரிக்கப்பட்டு, 7 பேர் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அவர்களில் நால்வருக்கு இதுவரை தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
3R விவகாரங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி, பொது அமைதிக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் ஊறு விளைவிப்போரிடம் அரசாங்கம் அனுசரனைக் காட்டாது என ஃபாஹ்மி எச்சரித்தார்.
அதற்காக, மக்களின் பேச்சுரிமையை அரசாங்கம் தடுப்பதாக அர்த்தமாகாது.
மாறாக, நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென்றார் அவர்.