
சிங்கப்பூர், பிப் 2 – சிங்கப்பூரில் புக்கிட் மேராவில் பல அடுக்கு கார் நிறுத்தப் பகுதியின் தடுப்பு சுவரில் கார் ஒன்று மோதியது. நான்காவது மாடியிலுள்ள கார் நிறுத்தும் பகுதியில் சிவப்பு நிற வோக்ஸ்வாகன் பீட்டில் (Volkswagen Beetle) காரை ஓட்டிய அதன் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதியதால் அக்காரின் முப்புற பகுதி சுவர்ப்பகுதியை உடைத்துக்கொண்டு வெளியேறியது. புதன்கிழமை மாலை மணி 5.45 அளவில் புக்கிட் மேரா சென்டரலில் 119 ஆவது புளோக்கில் இந்த விபத்து நிகழ்ந்தது குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் சிவில் தற்காப்பு படை தெரிவித்தது. அந்த காரின் ஓட்டுனர் சொற்ப காயத்திற்கு உள்ளானார். எனினும் அவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு மறுத்துவிட்டார். 5 ஆவது மாடியிலிருந்து 4ஆவது மாடிக்கு இறங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தம்மை அடையாளம் கூற மறுத்துவிட்ட அக்கார் ஓட்டுனர் தெரிவித்தார்.