ரபாட், பிப் 6 – மொரோக்கோவில் ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவனைக் காப்பாற்றும் முயற்சிகள் கடந்த நான்கு நாட்களாக இரவும் பகலுமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அச்சிறுவன் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ராயன் எனப்படும் அச்சிறுவன் விழுந்த பகுதியை மீட்புப் பணியாளர்கள் அடைந்த வேளையில் , இறந்த நிலையிலே அவனது உடலை அவர்களால் மீட்க முடிந்தது.
தனது தந்தை கிணற்றை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத நிலையில் ராயன் , மிக குறுகலான அந்த கிணற்றுக்குள் விழுந்தான். உடனடியாக அச்சிறுவனைக் காப்பாற்றும் நடவடிக்கையில் அந்நாட்டின் பொது தற்காப்புப் படையினர் இறங்கினர்.
நூற்றுக்கணக்கானோர் மீட்பு பணியாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் சம்பவ இடத்தில் கூடியிருந்த வேளையில், சமூக வலைத்தளங்களில் #SaveRayan எனும் ‘ஹேஷ்டக்’ பரவலாக பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மண்சரிவு ஏற்படக் கூடிய அச்சத்தினால் 32 மீட்டர் ஆளத்திற்குள் விழுந்திருந்த ராயனை மீட்கும் முயற்சிகள் மிக சிரமத்துடனும் கவனமுடனே மேற்கொள்ளப்பட்டது. கிணற்றின் பக்கத்தில் பெரிய பள்ளத்தை வெட்டி ராயனை அவர்கள் சென்றடைந்த வேளை , அவனை உயிருடன் காப்பாற்ற முடியாத பெரும் ஏமாற்றத்தில் உடலை சுமந்து கொண்டு அவர்கள் வெளியே வந்தனர்.