
கோலாலம்பூர், ஜன 3 – கெடாவில், 4-D நான்கு இலக்க சூதாட்ட கடைகளுக்கு தடை விதித்திருக்கும் அம்மாநில அரசாங்கத்தின் முடிவு , எதிர்பார்த்த பலனைத் தரப் போவதில்லை என , பினாங்கு மாநில துணையமைச்சர் டாக்டர் பி.ராமசாமி கூறியிருக்கிறார். அந்த தடையின் மூலமாக சமூகத்தின் ஆதரவைப் பெற முடியுமென பாஸ் கட்சி நம்புகிறது. அதன் மூலமாக மாநிலத் தேர்தலில் வெற்றி பெறவும் அக்கட்சி கங்கணம் கட்டியிருக்கிறது. அந்த முடிவு, அரசியல் ரீதியாக பாஸ் கட்சிக்கு ஒரு பலமாக அமைந்தாலும், நாட்டில் 4- D சூதாட்டம் பெரிய அளவில் சட்டவிரோதமாக செயல்பட அது வழிவகுக்குமென ராமசாமி கூறினார். அந்த சூதாட்ட கடைகளை மூடியதன் வாயிலாக கெடா, வரியின் மூலமாக பெற்று வந்த வருமானத்தை இழப்பதோடு, சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பெரும் சிரமத்தை எதிர்நோக்கும். அதோடு, ஒரு செயல் சட்டவிரோதமாக செயல்படும்போது , மறைமுகமாக கையூட்டுக்கும் அது வழிவகுக்குமென ராமசாமி கூறினார்.