பெர்லின், டிசம்பர்-15,வட அட்லாண்டிக் கடலில் 400 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழும் கிரீன்லாந்து சுறா (Greenland Shark) மீன்களைப் போலவே, மனிதர்களின் ஆயுட்காலமும் அதிகரிக்க சாத்தியமிருப்பதாக அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
ஆழ்கடலின் மர்ம உயிரினங்களில் ஒன்றாக வலம் வரும் இந்த கிரீன்லாந்து சுறா மீன்களின் மிக நீண்ட நெடிய ஆயுட்காலம், வெகு காலமாகவே அறிவியலாளர்களுக்கு பெரும் புதிராக இருந்து வருகிறது.
அதுவும், வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களின் குளிர்ந்த, இருண்ட நீரில், ஆண்டு முழுவதும் உறைபனி வெப்பநிலையைத் தாங்கும் அவற்றின் ஆற்றல் தனித்துவமானது.
முதுகெலும்பு உள்ள மிருகங்களிலேயே நீண்ட நாள் அதாவது 272 ஆண்டுகள் முதல் 500 ஆண்டுகள் வரை வாழக்கூடிய மிருகம் என்ற சாதனையை இந்த கிரீன்லாந்து சுறாக்கள் கொண்டுள்ளன.
அதற்கு மெதுவான வளர்சிதை மாற்றமே (slow metabolism) காரணமென அறிவியலாளர்கள் இதுநாள் வரை நம்பியிருந்தனர்.
இந்நிலையில், ஆராய்ச்சியாளர்கள் இப்போது தான் அந்த கிரீன்லாந்து சுறா மீன்களின் நீண்ட ஆயுளின் ரகசியங்களை அவிழ்க்கத் தொடங்கியுள்ளனர்.
அவ்வகையில் முதன் முறையாக அனைத்துலக ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று, கிரீன்லாந்து சுறாவின் மரபணுவை வரைபடமாக்கி, அதன் DNA-வின் 92 விழுக்காட்டை வரிசைப்படுத்தியுள்ளது.
இப்பெரும் சாதனையானது, சுறா மீனின் உயிரியல் அமைப்பு முறையை வெளிச்சம் போட்டு காட்டி, அதன் அசாதாரண ஆயுட்காலம் பற்றிய துப்புகளை வழங்குகிறது.
கிரீன்லாந்து சுறாக்களின் நீண்ட ஆயுளுக்கு பங்களிக்கும் முக்கியமான பிறழ்வுகளை, அந்த மரபணுவால் வெளிக்காட்ட முடியுமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
கிரீன்லாந்து சுறாவின் விதிவிலக்கான ஆயுட்காலம் ஓர் அறிவியல் அதிசயம் மட்டுமல்ல; மாறாக, மனித ஆயுட்காலம் பற்றிய நுண்ணறிவுகளையும் அதனால் வழங்க முடியும்.
இந்த சுறாக்களின் வயது மூப்பை ஆராய்வது, மனித ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கான கதவைத் திறக்கும்.
குறிப்பாக, மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை பாதிக்கும் உயிரியல் செயல்முறைகள் பற்றிய புரிதலை மேம்படுத்த உதவுமென, அறிவியலாளர்கள் பெரிதும் நம்புகின்றனர்.