Latestஉலகம்

400 மில்லியன் பக்தர்களை வரவேற்கத் தயாராகும் மகா கும்பமேளா

உத்தர பிரதேசம், டிசம்பர்-29 – விண்வெளியில் இருந்து பார்த்தாலும் கூட தெரியக் கூடிய அளவுக்கு, உலக வரலாற்றில் மிகப் பெரும் ஒன்றுகூடலாகக் கருதப்படும் மகா கும்பமேளாவுக்கு, இந்தியா மீண்டும் தயாராகி வருகிறது.

அவ்வகையில் வரும் ஜனவரி 13 தொடங்கி பிப்ரவரி 26 வரை உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரமே அதிரப் போகிறது.

சுமார் 400 மில்லியன் பக்தர்கள், அதாவது அமெரிக்கா -கனடா ஆகிய இரு நாடுகளின் மொத்த மக்கள் தொகைக்கு ஈடான கூட்டத்தை ஒரே இடத்தில் உலகமே கண்கூடாகப் பார்க்கவுள்ளது.

இந்து புராணங்களில் வேரூன்றியுள்ள இந்த 6 வார கால கும்ப மேளா ஒரு பழங்கால கொண்டாட்டமாகும்.

கங்கை, யமுனா, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடுவதற்காக இந்துக்கள் கூடுகின்றனர்.

சங்கமத்தில் குளிப்பதன் மூலம் பாவங்களில் இருந்து தங்களுக்கு விடுதலை கிடைத்து ‘மோட்சம்’ அடைந்து, பிறப்பு இறப்பு ஆகிய சுழற்சிகளிலிருந்து விடுதலை கிடைக்குமென்றும் இந்துக்கள் நம்புகின்றனர்.

இதற்காக, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்காக பெரிய அளவில் கூடார நகரமே உருவாக்கப்படுள்ளது.

சாலைகள் விரிவாக்கப்பட்டு, 150,000 கழிப்பிடங்கள் கட்டப்பட்டு, 68,000 LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

தவிர, ஒரே சமயத்தில் 50,000 பேருக்கு உணவளிக்கக் கூடிய சமூக சமையலறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுருக்கமாகச் சொன்னால், கும்ப மேளா ஏற்பாடு, ஒரு புதிய நாட்டையே உருவாக்குவதற்குச் சமம் என விழாக் குழுவினர் கூறுகின்றனர்.

ஆகக் கடைசியாக 2019-ல் நடைபெற்ற ‘அர்த்த கும்ப மேளா’, அதாவது இரண்டு கும்ப மேளாக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வரக்கூடிய பாதியளவு விழாவில், 240 மில்லியன் பக்தர்கள் பங்கேற்றதாக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!