மூவார், செப்டம்பர்-17 – ஜாமீன் தொகையைச் செலுத்தத் தவறியதால் ஒரு வாரமாக ஜோகூர் மூவாரில் சீர்திருத்த மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘Abang Bas’ எனும் பட்டப் பெயரைக் கொண்ட இளைஞன், இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.
3 குற்றச்சாட்டுகளுக்குமான 40,000 ரிங்கிட் ஜாமீன் பணத்தை குடும்பத்தார் கட்டியதை அடுத்து, இன்று காலை 11.50 மணிக்கு அவன் விடுவிக்கப்பட்டான்.
மகன் ஜாமீனில் வெளியானது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்த அவனது தந்தை, பணம் திரட்டி உதவிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
4 மற்றும் 9 வயது சிறுமிகளுக்கு உடல் ரீதியான மற்றும் உடல் ரீதியல்லாத பாலியல் தொல்லைக் கொடுத்ததாக 24 வயது அவ்விளைஞன் முதல் 2 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினான்.
9 வயது சிறுமியிருந்த வீடியோவில் அநாகரீகமான வாசகத்தை வைத்ததாக மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
முதலிரண்டு குற்றச்சாட்டுகளுக்கு 30,000 ரிங்கிட்டும், மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 10,000 ரிங்கிட்டும் ஜாமீன் தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
குற்றம் சாட்டப்பட்ட அன்றே ஜாமீன் தொகையைச் செலுத்த முடியாததால், அந்த தற்காலிக தடுப்பு மையத்தில் அவன் தடுத்து வைக்கப்பட்டான்.
ஜாமீன் தொகையைத் திரட்டுவதற்காக, அவனின் அக்காள் முன்னதாக சமூக ஊடகங்களில் பொது மக்களிடம் நன்கொடை கோரியது குறிப்பிடத்தக்கது.