
சைபர் ஜெயா, நவ 7 – மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) உத்தரவைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் 410.59 மில்லியன் கோரப்படாத குறுஞ்செய்தி சேவைகள் (SMS) தொலைத்தொடர்பு நிறுவனங்களால் தடுக்கப்பட்டன. மே 2 முதல் செப்டம்பர் வரை மிகை இணைப்புகள் எனப்படும் ‘Hyperlinks’ கொண்ட 19 மில்லியன் எஸ்எம்எஸ் தடை செய்யப்பட்டுள்ளதாக தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார். இணையதளங்கள், சமூக ஊடக கணக்குகள், எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகள் போன்ற ஆன்லைன் மோசடிகளை நிறுத்தவே இந்த முயற்சி என்று அவர் கூறினார்.
இன்னும் அனைத்து மோசடிகளையும் தடுக்கக்கூடிய தீர்வு எதுவும் இல்லை. எனவே, மக்கள் குறிப்பாக மோசடி செய்பவர்கள் புதிய பெயர்களை இன்னமும் பதிவு செய்து சட்டப்படியான செய்திகளை அனுப்பலாம் என்று அவர் கூறினார்.
பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஆன்லைன் மோசடிகளை எதிர்த்துப் போராடும் முயற்சியில் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட எந்தவொரு குறுஞ்செய்திகளும் அனுப்பப்படுவதையோ அல்லது பெறுவதையோ உடனடியாகத் தடுக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தியது.