
பாலேக் பூலாவ், ஜூன் 29 – நான்கு லட்சத்து 32,725 ரிங்கிட் சம்பந்தப்பட்ட மக்காவ் இணைய மோசடியில் தொழிற்சாலை ஊழியரை ஏமாற்றியதன் தொடர்பில் சொந்தமாக வேலை செய்து வந்த 39 வயதுடைய சந்தேகப் பேர்வழியும் மற்றொரு 35 வயது நபரும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டதாக பினாங்கு Bartat Daya மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 57 வயதுடைய பெண் ஒருவர் வருமான வரித்துறையின் அதிகாரி என கூறிக்கொண்ட ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பை பெற்றதை தொடர்ந்து இந்த மோசடிக்கு உள்ளாகியுள்ளார். வருமான வரித்துறைக்கு வரி பாக்கி செலுத்த வேண்டும் என அந்த நபர் கூறியபோதிலும் அதனை அப்பெண் மறுத்துள்ளார். அதன்பின் தம்மை போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்ட மற்றொரு ஆடவர் அப்பெண்ணிடம் பேசியிருக்கிறார்.
சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் குற்ற பின்னணியை அந்த பெண் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பெண் அதிர்ச்சிக்கு உள்ளானார். அதன் பின் Agro Bank கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் பரிமாற்றம் செய்துள்ளதோடு வங்கிக் கணக்கு விவரங்களையும் சந்தேகப் பேர்வழி வழங்கிய பாரத்தில் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு தமது வங்கிக் கணக்கை பரிசோதித்தபோது அதில் இருந்த அனைத்து நான்கு லட்சத்து 32,725 ரிங்கிட் சேமிப்பு தொகை காணாமல்போனதை உணர்ந்து அப்பெண் போலீசில் புகார் செய்துள்ளார்.