
புத்ராஜெயா, ஜனவரி-20 – பொதுச் சேவைத் துறையில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவை முகப்பிடங்களில் பணியாற்றியவர்களுக்கு, வேறு வேலைகள் தரப்பட வேண்டும்.
5 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காலமாகும்; எனவே தொழிலில் ஒரு மாற்றத்தை உணர அவர்களுக்கு வாய்ப்புத் தரப்பட வேண்டுமென, அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் (Tan Sri Shamsul Azri Abu Bakar) கூறினார்.
தொடக்கக் கட்டமாக இந்த ஓரிரு மாதங்களில் சேவை முகப்பிடங்களைக் கொண்ட அனைத்து அரசு துறைகளிலும் அது நடைமுறைக்கு வருமென அவர் சொன்னார்.
தாங்கள் இருக்கும் துறையிலேயே அவர்கள் பொறுப்பு மாறலாம்; அல்லது வேறு துறைகளுக்கும் மாறிச் செல்லலாம்.
அது அவர்களின் சேவைக் காலத்தைப் பொறுத்தது என தான் ஸ்ரீ ஷம்சுல் கூறினார்.
அரசாங்கத் தலைமைச் செயலாளரின் 2025 புத்தாண்டுச் செய்தியில் அவர் பேசினார்.