கின்றாரா, செப்டம்பர் -2, பூச்சோங் மக்கள் முற்போக்குக் கழகத்தின் ஏற்பாட்டில் ஏழாவது ஆண்டாக நாட்டின் சுதந்திர தினம், வர்ணம் தீட்டும் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.
கின்ராரா, தாமான் புக்கிட் கூச்சாய் சுபாங் ஜெயா மாநகர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற 67-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில், 5 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 55 மாணவர்கள், 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கின்ராரா தமிழ்ப்பள்ளி, காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி, பூச்சோங் 14 தமிழ்ப்பள்ளி, செர்டாங் தமிழ்ப்பள்ளி, புக்கிட் ஜாலில் தமிழ்ப்பள்ளி ஆகியவையே அந்த 5 தமிழ்ப்பள்ளிகளாகும்.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் பூச்சோங் மக்கள் முற்போக்குக் கழகத்திற்குக் கொடுத்த 2,000 ரிங்கிட் நன்கொடையை, நிகழ்வில் அவரின் பிரதிநிதியாக பங்கேற்ற ராஜசேகரன் வழங்கினார்.
மாணவர்களுக்கு பரிசுக் கூடைகள் வழங்கப்பட்ட வேளை, 60 வயதிற்கு மேற்பட்ட 15 முதியோருக்கு 40 ரிங்கிட் மதிப்புள்ள அன்பளிப்புகள், மாணவர்களுக்குச் சான்றிதழ்கள், பரிசுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன.
மாணவர்களிடத்தில் தேசப்பற்றை விதைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியை சிறப்பித்த அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வீ.சிவகுமார் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.