கோலாலம்பூர், ஆகஸ்ட் -20, வெறும் 5 வயதே ஆன பையன் கட்டடமொன்றின் வெளியே ஓரமாக அமர்ந்து தனியாகத் தின்பண்டங்களை விற்கும் செய்தி டிக் டோக்கில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
பிளாஸ்டிக் பைகள் நிறைய தின்பண்டங்களுடன் கொளுத்தும் வெயிலில் அவன் விற்பனைக்கு உட்கார்ந்திருக்க, அவனது பெற்றோர் அருகிலுள்ள கடைக்கு உணவருந்தச் சென்றுள்ளார்கள்.
தானும் வருவதாகக் கூறிய மகனை வேண்டாமென்று தடுத்து அவர்கள் தனியே விட்டுச் சென்றிருப்பது, நெட்டிசன்களை மேலும் சினப்படுத்தியுள்ளது.
வீடியோவை எடுத்து டிக் டோக்கில் பகிர்ந்தவரான @siti_aishahhh , அச்சிறுவனின் நிலை கண்டு பரிதாப்பட்டு, அவனுக்கு குடிக்க தண்ணீரும் பிஸ்கட்டுகளும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
அவனுக்கிருந்த பசிக்கும் தாகத்திற்கும் அவற்றை வாங்கி அவன் சாப்பிட்ட விதம் சித்தி ஐஷாவை மேலும் கண்கலங்க வைத்தது.
ஏழையாக இருப்பதில் தவறில்லை, ஆனால் இப்படி ‘முட்டாளாக’ இருக்காதீர்கள் என்ற தலைப்பில் அச்சிறுவனது பெற்றோரின் சாடும் வண்ணம் சித்தி ஐஷா தனது பதிவில் கூறியுள்ளார்.
அவர் கருத்தை நெட்டிசன்களும் ஆதரிக்கின்றனர்.
குழந்தைத் தொழிலாளர்களே கூடாது என்ற நிலையில், 5 வயது சிறுவனையெல்லாம் சொந்த பெற்றோரே இப்படி வேலை வாங்குதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர்கள் வேதனையோடு குறிப்பிட்டனர்.