ஒட்டாவா, பிப் 15 – கனடாவின் தலைநகர் ஒட்டாவா உட்பட முக்கிய நகர்களின் சில பகுதிகள் செயல் இழக்கும் வகையில் கடந்த சில நாட்களாக நீடித்துவந்த கனரக வாகன ஓட்டுனர்களின் பேரணியை முடிவுக் கொண்டு வருவதற்கு அவசர நிலைச் சட்டத்தை கனடா பிரதமர் Justin Trudeau பிரகடனம் செய்தார்.
வாகன ஓட்டுனர்களின் மறியலும் அவர்களது முற்றுகையும் நாட்டின் பொருளாதாரத்தை பாதித்திருப்பதோடு மக்களின் பாதுகாப்புக்கும் மிரட்டலை ஏற்படுத்தியிருப்பதாக செய்தியாளர் கூட்டத்தில் Justin Trudeau கூறினார். சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான நடவடிக்கைகளை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என அவர் எச்சரித்தார்.
எல்லையை கடக்கும் வாகன ஓட்டுனர்கள் கட்டாய தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தின் விதிமுறையை எதிர்த்து டிரக் ஓட்டுனர்கள் தொடர்ந்து மூன்று வார காலமாக மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். Justin Trudeau வின் தந்தையும் முன்னாள் பிரதமருமான Pierre Trudeau பிரதமராக இருந்தபோது 1970ஆம் ஆண்டு ஒரு முறை மட்டுமே அவசரநிலைச் சட்டம் கனடாவில் அமல்படுத்தப்பட்டது.