
கோலாலம்பூர் , செப் 14 – புற்றுநோயினால் கடந்த 30 ஆண்டுகளில் 50 வயதுக்கு மேற்பட்டோரில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்பது அண்மைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் இதற்கான காரணம் ஏன் என்று முழுமையாக தெரியவில்லை . 1990 முதல் 2019 வரை 14 முதல் 49 வயதுடையவர்களிடையே புற்றுநோய் பாதிப்புகள் கிட்டத்தட்ட 80 விழுக்காடு அகரித்து 1.82 மில்லியனிலிருந்து 3.26 மில்லியனாக உயர்ந்துள்ளதாக செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட புற்றுநோய் மீதான சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான உணவு, புகைபிடித்தல் மற்றும் மதுபானம் போன்றவை புற்றுநோய்க்கு அடிப்படையான முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால் “முன்கூட்டியே தொடங்கும் புற்றுநோய் சுமையின் அதிகரித்துவரும் போக்கு இன்னும் தெளிவாக இல்லை,” என்றும் ஆய்வின் மூலம் தெரியவருகிறது.
2019 ஆம் ஆண்டில் 50 வயதிற்குட்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புற்றுநோயால் இறந்தனர், இது 1990 ஐ விட 28 விழுக்காடு அதிகமாகும் என்று ஆய்வில் தெரியவருகிறது. மார்பகம், உணவுக்குழாய், நுரையீரல், குடல் மற்றும் வயிறு புற்றுநோய்கள்தான் கொடிய புற்றுநோய்கள் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூக்கின் பின்புறம் தொண்டையின் மேற்பகுதியை சந்திக்கும் நாசோபார்னக்ஸ் மற்றும் புரோஸ்டேட் ஆகியவை மிக வேகமாக வளர்ந்த புற்றுநோய்களாக கருதப்படுகிறது. நாடு எந்த அளவுக்கு வளர்ச்சியடைகிறதோ, அந்த அளவுக்கு 50 வயதுக்குட்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.